அமெரிக்காவில் விமானம் நடுவானில் குலுங்கியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
UA-1196 என்ற பயணிகள் விமானம் மெக்சிகோவின் கான்கன் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிகாகோவிற்கு புறப்பட்டது. விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-900 விமானத்தில் பணியாளர்கள் உட்பட 179 பேர் இருந்தனர். லூசியானா நகரை நெருங்கும் போது விமானம் திடீரென நடுவானில் குலுங்கியது. அப்போது பயணிகள் இருக்கையில் இருந்து நகர்ந்து முன் இருக்கையில் மோதினர். அச்சமடைந்த பயணிகள் அலறினர்.
இதையடுத்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில் டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, விமானம் டென்னசி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்புக் குழுவினர் பலத்த காயமடைந்த 7 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வேறு விமானம் மூலம் சிகாகோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.