WhatsApp Channel
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, 60 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் உள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். இதையடுத்து, ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அன்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், வீடியோ மூலம் ஆஜராகினால் போதும் என்றும், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி வீடியோ மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் செப்டம்பர் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதே நாளில், ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மனுவை விசாரித்தார். செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20ம் தேதி வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். இன்று தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதாகியுள்ள செந்தில் பாலாஜி, 60 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post