WhatsApp Channel
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு அமர்வு நடைபெற்று வரும் நிலையில் தமன்னா மற்றும் நடிகைகள் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். பின்னர், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நடிகை தமன்னா வரவேற்றார்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு அமர்வின் முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் வழக்கம் போல் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இரண்டாவது நாள் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்குப் பிறகு, மக்களவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா விரைவில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத், ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அழைக்கப்பட்டனர். அழைப்பை ஏற்று வருகை தந்த அவர்களுக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் இனிப்பு வழங்கினார். இதில் கலந்து கொண்ட நடிகைகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் சிறப்பு விருந்தினர்களாக புதிய நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை தமன்னா, “பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானியர்களை அரசியலில் சேர ஊக்குவிக்கும்” என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு இன்று வரை புதிய நாடாளுமன்றத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசின் அழைப்பின் பேரில் நடிகைகள் நாடாளுமன்றத்துக்குச் சென்றது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post