தமிழக பட்ஜெட் லோகோ மாற்றம்: தேவநாகரி குறியீடு நீக்கப்பட்டதை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டனம் செய்தார்
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்காக புதிய லட்சினை (லோகோ) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய லோகோவில், இந்திய ரூபாய் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தேவநாகரி “र” குறியீடு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “ரூ” எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசின் இந்த முடிவு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“ரூபாய் குறியீட்டை உருவாக்கியவர், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அவரது வடிவமைப்பு இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு அந்த சின்னத்தில் மாற்றம் செய்திருப்பது மிகப்பெரிய தவறான முடிவாகும். இது அரசின் முட்டாள்தனமான செயலை வெளிப்படுத்துகிறது” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.