WhatsApp Channel
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து, சென்னையில் கலாச்சார மையம் கட்டும் முயற்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஈடுபடப் போவதாக ஒப்பந்தம் கோரியிருக்கிறது.
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பது, கோவில் உண்டியல் பணத்தை எடுத்துக் கொள்வது, கோவில் நிதியில் வாகனங்கள் வாங்குவது, கோவிலுக்குத் தானமாக வந்த கால்நடைகளை திமுகவினருக்குக் கொடுப்பது என, தொடர்ந்து கோவில் சொத்துக்களை கையாடல் செய்வதிலேயே திமுக குறியாக இருக்கிறது.
கோவில் நிதியை கோவில் தொடர்பான பணிகளுக்கே பயன்படுத்த வேண்டும் என்று சட்டமே இருக்கையில், கோவில் நிதியையும், கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்து, கலாச்சார மையம் அமைக்கும் உரிமையை திமுகவுக்கு யார் தந்தது?
கோவிலுக்கான மூலதன நிதியை எதற்கும் எடுக்கக் கூடாது. அர்ச்சகர், பணியாளர் பயிற்சி, பக்தர்களுக்கான அடிப்படை வசதி செய்து கொடுப்பது உள்ளிட்ட சில விஷயங்களுக்கு மட்டுமே மூலதன நிதி போக மீதமுள்ள வருமானத்தைப் பயன்படுத்த வேண்டும். அது போக மீதி இருக்கும் உபரி நிதியைத்தான் வேத, ஆகம பாடசாலைகள், ஆதரவற்றோர் இல்லம், இந்து சமய மேம்பாட்டு பள்ளி கல்லூரிகள் அமைத்தல், நலிந்த கோவில்கள் புனரமைப்பு, மருத்துவமனை அமைத்தல் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று இந்து அறநிலைய சட்டப் பிரிவுகள் 36 மற்றும் 66 தெளிவாகக் கூறுகின்றன.
உபரி நிதியை, வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்கள் உள்ளிட்டவை கட்டப் பயன்படுத்தக் கூடாது என்பது சட்டத்தில் தெளிவாக இருக்கையில், சட்டத்தை மீறி இந்து சமய அறநிலையத் துறை செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உடனடியாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து, கோவில் நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கும் முறைகேட்டை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழக பாஜக சார்பாக மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்த உண்டியல் திருட்டு திமுக அரசை எச்சரிக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு.
Discussion about this post