தமிழக பாஜக தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடக்கம்
தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தலுக்கான செயல்முறைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் துணைத் தலைவர் எம். சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த தேர்தல் 12ம் தேதி (2025 ஏப்ரல் 12) நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (11.04.2025) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியிட விரும்புவோர் www.bjptn.com என்ற பாஜக இணையதளத்தில் இருந்து படிவங்களை பதிவிறக்கம் செய்து, மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் உறுப்பினராகவும், மூன்று பருவ காலத்திற்கு தீவிர உறுப்பினராகவும் இருந்திருக்க வேண்டும். அவரை பரிந்துரைக்கும் வகையில், 10 மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எழுத்துப் பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்காக, படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும். இதில் ஒருவரை ஒரு மாநில பொதுக்குழு உறுப்பினர் முன்மொழிந்து, மற்றொரு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்.
பாஜக அமைப்புத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மாநிலத் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள், யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.