2026 இல் தாமரை ஆட்சி மலரும் – நயினார் நாகேந்திரன் உறுதி
பாஜக தமிழகத் தலைவர் பொறுப்பேற்பு விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன், “2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிச்சயம் தாமரை ஆட்சி மலரும்,” என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் H. ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்னையன், CP ராதாகிருஷ்ணன், எல். முருகன், வானதி ஸ்ரீனிவாசன், இல. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட கோபுரத்துக்கு, அண்ணாமலை தனது “என் மண் என் மக்கள்” யாத்திரையின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் சென்றதன் பயனாக கலசம் வைக்கப்பட்டுவிட்டதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
தற்போதைய பாஜக நடவடிக்கைகள் அந்த கோபுரத்தில் கலசத்திற்குக் கும்பாபிஷேகம் செய்வதற்கே சமம் எனவும், அது வரும் 2026 மே மாத தேர்தலில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற 4 தொகுதி வெற்றியை குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
தற்போதைய திமுக ஆட்சி குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். இது ஒரு மக்கள் விரோத ஆட்சி, பாலியல் வன்கொடுமைகளை உதாசீனப்படுத்தும் ஆட்சி, மதுபானங்களை ஊக்குவிக்கும் ஆட்சி எனக் கூறினார். இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விழாவின் ஒரு முக்கியமான தருணமாக, நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டு, அண்ணாமலை செருப்புகளை கழட்டி அணிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.