நுண் நிதி நிறுவனங்களை தணிக்கை செய்யக்கோரி காஞ்சிபுரத்தில் போராட்டம்

0

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு கண்டனம் தெரிவித்து, அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் மன்றத்தின் சார்பில் இன்று (ஜூன் 3) தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்பாளர்கள், “தமிழ்நாட்டில் இயங்கும் நுண் நிதி நிறுவனங்களை சீராக பரிசீலிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும். மகளிர் உரிமைத் தொகை மற்றும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்க வேண்டிய கூலியை பெற முடியாத நிலையை உருவாக்கும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், நுண் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக சுயாதீனமாக விசாரணை நடத்த பழங்குடியினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும்.

கடன் வசூலிக்கும்போது மக்களை அச்சுறுத்தி தற்கொலைக்கு தூண்டும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வட்டியுடன் கடன் அளிக்கின்றவர்களை கட்டுப்படுத்தி, அரசு தலையீடு செய்து 1 சதவீத வட்டியுடன் கடன்களை வழங்க வேண்டும்” என கோரிக்கை முன்வைத்தனர்.

இந்தப் போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஏ. ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் பா. கார்த்திக், மக்கள் மன்ற வழக்கறிஞர் ஜெஸி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here