முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துகள், தமிழகத்தின் கல்வி மரபை மதிக்காமல் அதை மறைக்கும் செயலில் ஈடுபடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் 7,000 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்ற தகவலை எடுத்துக்காட்டி, “அவர்களுக்கு தேவையான கல்வி அறிவும், திறமையும் இல்லை” என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது, மாணவர்களையும் கல்வியாளர்களையும் கீழ்ப்படுத்தும் வகையிலான நேரடியான அவமதிப்பு ஆகும். இது, தமிழக கல்வி மரபின் மதிப்பை மங்கச் செய்கின்ற துரதிஷ்டவசமான மற்றும் நோக்கமுள்ள செயல் என கூறலாம்.
தமிழக கல்வித் தரம் பற்றி ஆளுநருக்கு எந்த அளவிற்கு அறிவுள்ளது? “படிப்பதாலே போதுமா? அறிவும் திறமையும் உள்ளதா?” என்ற அவரது கேள்வி மிகவும் அநாவசியமானதும், நகைச்சுவைக்குரியதுமானதும் ஆகும்.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற முக்கியமான பல்கலைக்கழகங்கள், தேசிய மதிப்பீட்டு மற்றும் தரச் சான்று நிறுவனத்தால் ‘A’ மற்றும் ‘A+’ தரச்சான்றுகள் பெற்றுள்ளன. இவை யுஜிசியின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றன.
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் (ஹார்வர்டு, எம்ஐடி, ஸ்டான்போர்ட்) முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதன் மூலம், இளைஞர்களின் கல்வி வளர்ச்சியை குறைத்து காட்ட முயல்கிறார் என்பது வருந்தத்தக்கது.
அவருடைய அவமதிப்பு கூற்றை அவர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் இத்தகைய கருத்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.