திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை ஊதிவிடக் கூடாது – திருமாவளவன் எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., பின்னர் அருகிலுள்ள சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலிலும் பழனியாண்டவர் கோயிலிலும் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“திருப்பரங்குன்றத்தில் இந்து, முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக அமைதியுடன், சகோதரத்துவ உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை.
மலை உச்சியில் இஸ்லாமியர்கள் வழிபடும் தர்காவும், இந்துக்கள் வழிபடும் காசிவிஸ்வநாதர் கோயிலும் உள்ளது. இரு சமயத்தினரும் ஒரே பாதையில் சென்று, நெல்லித்தோப்பில் பிரிந்து தங்கள் தலங்களுக்கு செல்கின்றனர். அடிவாரத்தில் பழனியாண்டவர் கோயிலும் முருகன் கோயிலும் உள்ளன.
சமூக நல்லிணக்கம் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், சில மதவாத அமைப்புகள் பகையை ஊட்ட முயற்சி செய்கின்றன. இதை அரசியல் அல்லது மத அடிப்படையில் வன்முறையாக்க முயற்சிக்க கூடாது.
மக்களின் மனநிலையை அறியவே இங்கு வந்தேன். நேரம் குறைவாக இருந்ததால் மலை உச்சிக்கு செல்ல முடியவில்லை. எனினும், இரு தரப்பினரையும் சந்தித்து, நல்லிணக்கம் நிலவுகிறது என்பதைக் கேட்டறிந்தேன்.
இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தக் கூடாது. மத அடிப்படையிலான வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காக இன்று மதுரையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கிறேன்.”