தரமில்லாத கட்டிடங்கள் கட்டும் பிஎஸ்டி நிறுவனம் மீதும், இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து அரசு வேலை கொடுக்கும் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் அறிக்கையில்,
சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் பழுதானதால் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து கணேசன் என்ற 52 வயது முதியவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஐஐடி குழு அறிக்கையின்படி ஏழைகளுக்காக கட்டப்பட்ட கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து, இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி இன்ஜினியரிங் நிறுவனம், அரசுப் பணியில் பங்கேற்க முடியாத வகையில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என திமுக அரசு தெரிவித்தது.
தரமற்ற வீடுகளை கட்டிய பிஎஸ்டி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு மீண்டும் அதே பிஎஸ்டி நிறுவனத்திடம் சென்னை நந்தம்பாக்கத்தில் ₹250 கோடியில் நிதி தொழில்நுட்ப நகரம் அமைக்க திமுக அரசு ஒப்பந்தம் செய்தது.
இது குறித்து, 2023 ஜூன் 19ல் கேள்வி எழுப்பியிருந்தோம். முறையான டெண்டர் மூலம்தான் அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று திமுக அரசு பதிலளித்தது.
பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனம் எப்படி அரசு ஒப்பந்தத்தில் பங்கேற்றது என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. தற்போது, லிப்ட் பழுதாகி ஒரு உயிர் பலியாகியுள்ளது.
ஐஐடி ஆய்வறிக்கையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தரமில்லாத கட்டிடங்கள் கட்டும் நிறுவனங்களுக்கு அரசுப் பணியை பலமுறை வழங்கிய திமுக அரசே இதற்கு முழுப் பொறுப்பு.
ஏழை மக்களின் வாழ்வு என்றால் திமுகவுக்கு இவ்வளவு சுலபமா? இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற கட்டிடங்கள் கட்டும் பிஎஸ்டி நிறுவனம் மீதும், இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து அரசு பணிகளை வழங்கி வரும் பிஎஸ்டி நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post