ஒவ்வொரு மாநில மக்களையும் கம்யூனிஸ்டுகள் ஏமாற்றி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
தமிழகக் கலாச்சாரத்தின் பெருமையான செங்கோலையும், பண்டைய தமிழக மன்னர்களையும், நமது மூதாதையரான பண்டைய தமிழக மகளிரையும் அவமானப்படுத்திவிட்டு, பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்ததும் செங்கோலுக்குப் புதியதோர் விளக்கம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் திரு. சு. வெங்கடேசன் அவர்கள்.
நீதி மற்றும் அறத்தின் குறியீடு செங்கோல் என்பதை ஒப்புக்கொள்ளும் நீங்கள், ஜனநாயகத்தில் நீதி மற்றும் அறத்துக்கு இடமில்லை என்று சொல்ல முயற்சிப்பதைப் போலத் தெரிகிறது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சந்தர்ப்பவாத இந்தி கூட்டணிக் கட்சிகளிடம் இல்லாத நீதி மற்றும் அறம், ஜனநாயகத்தில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதற்கான அடையாளமாகவே, பாராளுமன்ற அவையின் மையத்தில் செங்கோல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை, உங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தங்களின் நாவல்களில், காலம்தான் கதாநாயகன் என்று கூறியிருக்கிறீர்கள். நன்று. காலநதி, கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கூழாங்கல்லைப் போல உருட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இடம் எது என்பதையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒரு தொகுதிக்கும் இரண்டு தொகுதிக்கும், திமுகவிடம் ஒட்டு மொத்த கட்சியையுமே அடகு வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு, இவற்றை எல்லாம் பேசத் தகுதி உள்ளதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
காலாவதியான ஒரு சித்தாந்தத்தை, தங்கள் சந்தர்ப்பவாதத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு. தமிழக எல்லை வரை காங்கிரஸுடன் கூட்டணி, கேரளாவிற்குச் சென்றால், காங்கிரஸ் எதிர்ப்பு என்று, ஒவ்வொரு மாநில மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கொண்டு, அரசியல் சாசனம் குறித்தும், நேர்மையைக் குறித்து நீங்கள் பேசுவது நகைப்பிற்குரியது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒட்டு மொத்த இந்தி கூட்டணிக் கட்சிகளும் வென்ற தொகுதிகளையும் சேர்த்தாலும், பாஜக தனியாக வென்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைப் பெற முடியவில்லை என்ற உண்மை எப்போது உங்களுக்கு உரைக்கும்?
இறுதியாக, மதுரை மேயருக்கு நீங்கள் கொடுத்த செங்கோலுக்கும், பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழர் மரபு செங்கோலுக்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் கூறுவது, ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்துகிறது. மனம் விட்டுச் சிரித்தேன். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் உங்களிடம் இன்னும் சிறப்பான பதிலை எதிர்பார்த்திருந்தேன்.
நான் மனதார சிரித்தேன். ஒரு எழுத்தாளராக உங்களிடமிருந்து சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் என்றார் அண்ணாமலை.
Discussion about this post