ஆம்ஸ்ட்ராங் மறைவையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ஆம் தேதி இரவு, புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உட்பட 8 பேர் அன்றிரவு கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மறுநாள் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடி, வழக்கறிஞர் மற்றும் தமாகா நிர்வாகி ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணைச் செயலாளராக இருந்த தாதா அஞ்சலியும் கைது செய்யப்பட்டார். மேலும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரனும் கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்: இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் இருந்த தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி போர்க்கொடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த ஆனந்தன்?: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் டாக்டர் பி.ஆனந்தன். இவரது தந்தை பெயர் பஞ்சாட்சரம், தாயார் பெயர் சரஸ்வதி. ஆனந்தன் 1974 இல் பட்டாபிராமில் பிறந்தார். 1992 முதல் 1997 வரை சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
அப்போது, கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் தலைவராக இருந்த அவர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் விழாவை நடத்தினார். அதன்பிறகு, மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோவிடம் ஜூனியர் வக்கீலாக ஆறு மாதங்கள் பணியாற்றி, தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி, தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வக்கீல்களிடம் வழக்கறிஞர் பணி செய்து வருகிறார்.
முக்கிய வழக்குகளில் ஆஜரானார்: நடிகர் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரின் விவாகரத்து வழக்குகளை பி.ஆனந்தன் கையாண்டார். 26 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
திருமணம் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து, திருமணம் செல்லாது என்ற உத்தரவைப் பெற்றார். வழக்கறிஞர் ஆனந்தன். மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீதான வழக்குகளில் ஆஜராகி அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை விடுவித்தார்.
பிஎச்டி: பல ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறார். ஆவடி பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு தங்கும் வசதியும் உணவும் இலவசமாக வழங்கி வருகிறார். இவரது சமூக சேவையைப் பாராட்டி அமெரிக்கப் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.
அவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று சட்ட வர்ணனையாளராகவும் இருந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியில் மறைந்த மாநிலத் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங்குடன் 2006 முதல் தொடர்ந்து பணியாற்றினார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் திருவள்ளூர் மாவட்டத் தொகுதியில் போட்டியிட்டு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.