“வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்?” என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இதற்கு முன்பு இணை ஒருங்கிணைப்பாளராகவும், தற்போது பொதுச்செயலாளராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ததாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்டதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.