தமிழக பா.ஜ.க. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள் மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பா.ஜ.க. வெளியிட்ட பதிவில்:
“இந்தியா கூட்டணியின் பெண்ணியப் போராளிகள் கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு, உங்கள் இந்தியா கூட்டணியின் ஒரு பெண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத்தின் அரசு மருத்துவமனையில், ஒரு பெண் மருத்துவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை?
அப்பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மேற்குவங்கம் அலைகொட்டிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட பெண்ணியப் போராளிகளாக நீங்கள் இன்னும் அமைதி காப்பது ஏன்? இது உங்கள் இந்தியா கூட்டணியின் ஒப்பந்தமா? இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் முழுவதும் காயங்களுடன், அவள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பற்றிய தகவல், இன்னும் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?
இந்த கொலை தற்கொலை என்று கூறி, அவசரமாக வழக்கை முடிக்க முயற்சித்த கொல்கத்தா காவல்துறைக்கு எதிராக, நீங்கள் எப்போதுதான் எதிர்ப்பு தெரிவிப்பீர்கள்? ‘செமினார் அரங்கிற்கு இரவில் தனியாக அவள் எதற்கு சென்றாள்?’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பழி சொல்லெறிய, மேற்குவங்க அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வருக்கு எதிராக, பெண்ணியப் போராளிகளாக நீங்கள் சிறிய கண்டனங்களை கூட தெரிவிக்காதது ஏன்?
‘பெண்களுக்கான சமூக நீதி’ என்பது உங்கள் நாடாளுமன்ற பேசுதலுக்கு மட்டும் தானா? அல்லது உங்கள் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலம் என்பதால், உங்கள் மனசாட்சியை கழற்றி வைத்து மவுனமாகி விட்டீர்களா?
குற்றம் நடந்த இடத்தில் திடீர் கட்டுமானப் பணிகளைத் துவங்குதல், குற்றம் நடந்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரை வேறு கல்லூரிக்கு அவசரமாக மாற்றுதல் போன்ற தடயங்களை அழித்து, இக்கொலையை மூடி மறைக்க நினைக்கும் உங்கள் கூட்டணிக் கட்சியின் முதல்வருக்கு எதிராக நீங்கள் எப்போதுதான் குரல் கொடுப்பீர்கள்?
ஒருவேளை இக்கொலையில் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற கேள்வி உங்கள் மனதை உறுத்தவில்லையா? இன்று உங்கள் கூட்டணிக் கட்சியின் மானத்தைக் காப்பாற்ற நீங்கள் காக்கும் இந்த கனத்த மவுனமானது, நாளை பல பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post