ஜார்கண்ட் மாநில நலனுக்காக பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக சம்பய் சோரன் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் ராஞ்சியில் தனது ஆதரவாளர்களுடன் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாஜகவில் இணைகிறார்.
முன்னதாக, ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்றபோது ஜார்கண்ட் முதல்வராக சம்பய் சோரன் இருந்தார். சுமார் 5 மாதங்கள் முதல்வராக இருந்தார். ஜூன் மாத இறுதியில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, சம்பய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜகவில் சேருவதற்காக சம்பய் சோரன் சமீபத்தில் டெல்லி சென்றார். மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பாஜகவில் சேரலாம் என்று கூறப்படுகிறது. சம்பய் சோரன் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார்.
இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பழங்குடியின தலைவருமான சம்பய் சோரன் ஆகஸ்ட் 30ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணையவுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் நலனுக்காக பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக சம்பய் சோரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜார்கண்ட் மாநிலத்தின் நலன்களை பொறுத்தே பாஜகவில் இணைவது எனது முடிவு. போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். விரைவில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வேன்.
Discussion about this post