இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்றாலும், தமிழக மீனவர்கள் பழைய நிலையே தொடர்வது வேதனை அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டிய இலங்கை கடற்படையினர் நேற்று காலை மீண்டும் 17 தமிழக மீனவர்களை சிறைபிடித்து அவர்களது 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த செல்வம், வியாதராஜ் ஆகியோருக்குச் சொந்தமான படகுகளில் நெடுந்தீவு அருகே பால்குடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து விசாரணைக்காக மன்னார் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்றாலும், பழைய நிலையே தொடர்வது தமிழக மீனவர்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
இவ்வாறு கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் துன்புறுத்தப்படுவதால் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் பெரும் அபராதம் விதித்து வருகிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தொடர் மனிதாபிமானமற்ற செயல்கள் மூலம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஆனால் இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. இந்திய எல்லைக்குள் பாரம்பரிய இடங்களில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வது தமிழக மீனவர்களின் உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
எனவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருதி தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனையை இலங்கை அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்திய நாட்டின் கடும் எதிர்ப்பை தெரிவித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் வருங்காலத்தில் தங்கள் மீன்பிடி நடவடிக்கைகளை அமைதியாக மேற்கொள்ளவும், சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன். மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post