ஐபிஎல் 2025: டெல்லியை 12 ரன்களில் வீழ்த்திய மும்பை அணி வெற்றிபெற்றது
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் அருண்ஜெட்லி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் தலைவர் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரிக்கல்டன் களமிறங்கினர். ரோகித் சர்மா வெறும் 18 ரன்களில் அவுட்டானாலும், ரிக்கல்டன் 41 ரன்கள் எடுத்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி 60 ரன்கள் சேர்த்து அணிக்கு வலு சேர்த்தனர். சூர்யகுமார் 40 ரன்கள், திலக் வர்மா 59 ரன்கள், நமன் திர் 38 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் மும்பை அணி 205 ரன்கள் எடுத்தது. டெல்லியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
206 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் பிரசர் மற்றும் அபிஷேக் போரேல் களமிறங்கினர். ஆனால் ஜாக் பிரசர் முதல் பந்திலே வெளியேறினார். அடுத்து அபிஷேக் போரேல் மற்றும் கருண் நாயர் ஜோடி அமைத்து வேகமாக ரன்கள் குவித்தனர். கருண் நாயர் 22 பந்துகளில் அரைசதம் எடுத்து 89 (40) ரன்களில் சிறப்பாக விளையாடினார்.
அந்த வீரரின் ஆட்டத்தால் டெல்லியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. ஆனால் அவர் வெளியேறியதுடன் டெல்லியின் மோமெண்டம் குறைந்தது. கே.எல்.ராகுல் (15), அக்சர் படேல் (9), விப்ராஜ் நிகம் (14), அசுதோஷ் சர்மா (17) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இறுதியில் 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மும்பை அணியில் கரண் சர்மா 3 விக்கெட்டுகள், சாண்ட்னர் 2, பும்ரா, தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியுடன் மும்பை அணி தொடரில் 2-வது வெற்றியைப் பெற்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.