கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டியில், புதுடெல்லியைச் சேர்ந்த மத்திய நேரடி வரிகள் துறையின் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கோவில்பட்டியில் உள்ள கே.ஆர். மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையும், கே.ஆர். கல்வி நிறுவனங்களும், லட்சுமி அம்மாள் விளையாட்டு அகாடமியும் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் கடந்த மே 23ம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில், நேற்று மாலை 5 மணிக்கு 3வது மற்றும் 4வது இடங்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில், புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில், 4 – 2 என்ற கோல் எண்ணிக்கையுடன், பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தது.
அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் துறை அணி மற்றும் புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழகம் அணிகள் மோதின. போட்டியை, கே.ஆர். குழுமங்களின் துணைத் தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் தலைமையில், முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும் அர்ஜுனா விருது பெற்றவர் எம். முகமது ரியாஸ் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில், 3 – 2 என்ற கோல் கணக்கில், மத்திய நேரடி வரிகள் துறை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- சாம்பியன் பட்டம் பெற்ற மத்திய நேரடி வரிகள் துறை அணிக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசும்,
- இரண்டாம் இடம் பிடித்த நிஸ்வாஸ் ஹாக்கி கழகம் அணிக்கு ரூ.1 லட்சம்,
- மூன்றாம் இடம் பெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கி அணிக்கு ரூ.50 ஆயிரம்,
- நான்காம் இடம் பெற்ற சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு நினைவு கோப்பை வழங்கப்பட்டது.
மேலும், போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு சிறந்த கோல்கீப்பர், சிறந்த தற்காப்பு வீரர், சிறந்த நடுகள வீரர், சிறந்த முன்வரிசை வீரர், சிறந்த வளர்ந்து வரும் வீரர் மற்றும் போட்டியின் சிறந்த வீரர் ஆகிய தனிநபர் விருதுகளும் வழங்கப்பட்டன.