பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இமானே கெலிஃப்புக்கு பாலின சோதனை விவகாரம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப், கட்டாய மரபணு அடிப்படையிலான பாலின பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது, உலக குத்துச்சண்டை அமைப்பின் புதிய நிர்வாக குழுவால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சுவிட்சர்லாந்தில் உள்ள லோசான் நகரில் தலைமையிடம் கொண்ட உலக குத்துச்சண்டை அமைப்பு (World Boxing) இந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, அனைத்து போட்டியாளர்களுக்கும் மரபணு அடிப்படையிலான பாலின சோதனை அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டது.
அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப்பின் விவகாரம் குறிப்பாக குறிப்பிடப்பட்டது. நெதர்லாந்தில் வரும் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்கு முன், இமானே இந்த சோதனையை அனுபவிக்க வேண்டும் என உலக குத்துச்சண்டை அமைப்பு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மட்டுமே அவர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்.
“போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்புக்காகவே இந்த சோதனை அவசியமாக்கப்பட்டுள்ளது. இதில், அவர்களின் பாலினம், வயது மற்றும் எடை உறுதி செய்யப்படும். இந்த சோதனை தேசிய அளவிலான குத்துச்சண்டை சங்கங்களால் நடத்தப்பட்டு அதன் அறிக்கையை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சர்வதேச குத்துச்சண்டை அமைப்புக்கு மாற்றாக, உலக குத்துச்சண்டை அமைப்பின் பரிந்துரை ஏற்கப்படும் என கூறப்பட்டாலும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், போட்டியாளர்களின் பாலின அடையாளம் தொடர்பான சோதனை தொடர்பாக உலக குத்துச்சண்டை அமைப்பு எதிர்நோக்கிய அழுத்தங்களைப் பின்பற்றி இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இமானே கெலிஃப் யார்?
பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்கள் 66 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில், இத்தாலியின் ஏஞ்சலா கரினியுடன் போட்டியிட்ட இமானே, 46 நொடிகளில் வெற்றி பெற்றார். ஆனால், இமானே பெண் இல்லை என ஏஞ்சலா நடுவர்களிடம் புகார் அளித்ததால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இமானே “நான் பெண்ணாகவே பிறந்தவள், பெண்ணாகவே வாழ்கிறேன்” என்று பதிலளித்தார்.
இதையடுத்து, சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அவரை தற்காலிக தகுதி நீக்கம் செய்தது. எனினும், பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி அந்த பரிந்துரையை ஏற்காமல், இமானே போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்து, அவர் தங்கப் பதக்கம் வென்றார்.