மேட்ச் ரெஃப்ரீ நீக்க கோரிக்கையை நிராகரித்த ஐசிசி: கடைசி நிமிடம் வரை மைதானம் செல்லத் தவிர்த்த பாகிஸ்தான் அணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது டாஸ் நிகழ்ச்சியிலும், போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. மேலும், டாஸ் நிகழ்ச்சியில் விளையாடும் 11 பேர் பட்டியலை இரு அணிகளின் கேப்டன்கள் பரிமாறிக் கொள்ளாமல், ஐசிசி மேட்ச் ரெஃப்ரீ ஆண்டி பைகிராஃப்ட்டிடம் ஒப்படைத்தனர்.
போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் அணியின் மேலாளர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்து, மேட்ச் ரெஃப்ரீ ஆண்டி பைகிராஃப்ட்டை தொடரிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
அதேவேளை, பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதிய போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் மேட்ச் ரெஃப்ரீயாக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிராக பாகிஸ்தான் அணி மீண்டும் ஐசிசிக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரை மாற்றி ரிச்சர்ட்சனை நியமிக்காவிட்டால் ஆட்டத்தை புறக்கணிப்போம் என எச்சரித்தது. ஆனால் இதற்கும் ஐசிசி மறுப்பு தெரிவித்தது.
இதனால், பாகிஸ்தான் அணி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தது. இருந்தாலும் வீரர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். அடுத்த நாள் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும் நிலை இருந்தது.
ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து போட்டி அட்டவணையை திடீரென நீக்கியது. இதனால் பாகிஸ்தான் அணி விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்தது. அணி விலகினால் 140 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் தகவல் வெளியானது.
போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில், 7.30 மணி வரை பாகிஸ்தான் அணி ஹோட்டலை விட்டு மைதானம் செல்லவில்லை. அப்போது, ஐசிசி தலைமை நிர்வாகி சஞ்சோக் குப்தா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியிடம் தொடர்பு கொண்டு, “ஆண்டி பைகிராஃப்ட் விதிமுறைகளின்படி நடந்துள்ளார். அதனால் அவர் மேட்ச் ரெஃப்ரீயாகவே தொடர்வார்” என்று தெளிவுபடுத்தினார்.
பின்னர், மோஷின் நக்வி முன்னாள் தலைவர்கள் ரமீஸ் ராஜா, நஜாம் சேதி ஆகியோருடன் ஆலோசித்து, போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என்றும், வீரர்கள் மைதானத்துக்கு புறப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு மேட்ச் ரெஃப்ரீ ஆண்டி பைகிராஃப்ட் முன்னிலையில் டாஸ் நடத்தப்பட்டது. டாஸை வென்ற ஐக்கிய அரபு அமீரக கேப்டன் முஹம்மது வசீம் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் இலக்காகக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம், 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு அமீரகம் தொடரிலிருந்து வெளியேறியது.