புதுக்கோட்டை அருகே உள்ள சிப்காட் பகுதியின் ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் இன்று காலை ஒரு கோரமான சாலை விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்தும் தனியார் பள்ளிக்குச் சொந்தமான பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த திடீர் விபத்தில் 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த உடனேயே அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். குழந்தைகள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் குழந்தைகளின் நிலையை கவனித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் நேரில் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளின் நலம் குறித்து விசாரித்தார். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை நேரில் சந்தித்து அவர்களை ஆற்றுப்படுத்தினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைத் தொடர்புகொண்டு விபத்தின் விவரங்களை எடுத்துரைத்தார். தகவலைக் கேட்ட அண்ணாமலை, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக பேசினார்.
அவர்களுடன் உரையாடிய போது, குழந்தைகள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார்கள் என்று உறுதிபடுத்தினார். மேலும், மருத்துவர்களிடம் பேசிச் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததோடு, குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் முழுமையாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய அறிவுறுத்தினார்.
இந்த விபத்து பள்ளி மாணவர்களிடையே பெரும் பதட்டத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்ணாமலையின் ஆறுதல் வார்த்தைகள் பெற்றோர்களுக்கு சிறிதளவு தேறுதலாக அமைந்தன. விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.