அதிமுக மாவட்ட அளவிலான கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. சேலம். விழுப்புரம் மாவட்டங்களுக்குப் பிறகு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவும் தீர்மானத்தை நிறைவேற்றியது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலான கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1. சூழ்ச்சிகள் , தந்திரங்கள் , சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து , மக்களின் பேரன்பைப் பெற்று 75 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர் அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
2. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக , அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள முயல்கிறார். ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
3. அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் , இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோன்ற தீர்மானம் திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடந்த கூட்டத்திலும் நிறைவேற்றப்பட்டது.
Discussion about this post