சென்னை மண்ணடியில் போலி இ-பதிவுடன் வந்து பிடிபட்ட ஆட்டோ ஓட்டுநர், வாகனத்தை பறிமுதல் செய்த பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக சாபமிட்டதோடு, அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் பொருட்டு, சென்னை பாரிமுனை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ ஓட்டி வந்த அக் ஷர் அலி என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி எனவும், மருத்துவக் காரணங்களுக்காக வெளியே செல்வதாகவும் கூறி இ-பதிவு பெற்றுவிட்டு ஆட்டோவில் சவாரி ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிந்த முத்தியால் பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா, ஆட்டோவையும் பறிமுதல் செய்தார். முதலில் ஆட்டோ சாவியை தருமாறு உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அக்ஷர் அலி, பின்னர் அவரை தரக்குறைவாக பேச தொடங்கினார்.
என்னுடைய வேலையைதான் தான் செய்ததாக கூறிய உதவி ஆய்வாளரை, ஒரு பொன்னு நீயே இப்படி பேசுறியா என இழிவாகவும் பேசினார். போலீசார் கடமையை தான் செய்ததாக அங்கிருந்தவர்கள் அவருக்கு புத்தி கூறிய போதும், அதனை கேட்காத அக் ஷர் அலி ஆபாசமாக பேசியதோடு, உதவி ஆய்வாளரை நோக்கி நீ நாசமா போய்டுவ நீ என சபித்தார்.
யாருக்கோ செல்போனில் போன் செய்து வைத்துக் கொண்டு உதவி ஆய்வாளரை பேசுமாறு வற்புறுத்திய அக் ஷர் அலி, 40 வருடமா இந்த ஏரியால தான் இருக்கேன், அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசுறியா எனக் கேட்டு ஒருமையில் திட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ள பெண் எஸ்.ஐ கிருத்திகா தன்னிடம் உள்ள ஆட்டோ சாவியை அக்சர் அலி பிடித்திழுத்து காயத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை பயன்படுத்தி போலி காரணங்களை கூறி சிலர் இ-பதிவு பெறுவதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று சேத்துப்பட்டில் பெண் வழக்கறிஞர் ஒருவர் போலீசாரை ஒருமையில் பேசி தகராறு செய்த நிலையில், அதேபோன்று மண்ணடியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பெண் போலீசாரை ஆபாசமாக தரக்குறைவாக பேசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆட்டோ ஓட்டுநர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், தொற்று நோயை பரப்பும் விதத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post