சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மறுபடியும் எம்எல்ஏ ஆக பாமக எம்எல்ஏ ஒருவர் மூலம் காய் நகர்த்தி வருவதாகவும் இதற்கு 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டத்துறை அமைச்சராக இருந்த சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவால் விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்திற்கு எதிராக கொம்பு சீவி விடப்பட்ட முன்னாள் எம்பி லட்சுமணன் திமுகவில் இருந்து விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு சிவி சண்முகத்தை தோல்வி அடைய வைத்தார். அதிமுகவில் அதிகாரம் பொருந்திய அமைச்சர்களாக இருந்த வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் போன்றோர் எல்லாம் மிக எளிதாக வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளனர்.
ஆனால் அதிமுக அரசில் முக்கிய நபராக இருந்ததுடன் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததுடன் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஓரங்கட்ட தீவிரமாக செயல்பட்டவராகவும் சிவி சண்முகம் விளங்கினார். ஆனால் தேர்தலில் அவர் தோற்றது அவருக்கு மட்டும் அல்ல அதிமுக மேல்மட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சட்டப்பேரவை தேர்தலில் தோற்றாலும் எம்எல்ஏ ஆகும் கனவில் சிவி சண்முகம் தொடர்ந்து மிதந்து வருவதாக கூறுகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு போட்டியிட்டு சிவக்குமார் எம்எல்ஏவாக உள்ளார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக சிவி சண்முகத்துடன் மயிலம் பாமக எம்எல்ஏ சிவக்குமார் நெருக்கம் காட்டி வருகிறார். விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாமக எம்எல்ஏ சிவக்குமார் பங்கேற்றார். அத்துடன் சிவக்குமாருக்கு ஆலோசனை கூட்டத்தில் முதல் வரிசையில் சி.வி.சண்முகத்திற்கு அருகே சீட் கொடுக்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பாமக எம்எல்ஏ சிவக்குமார் வந்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இது குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் பேசிய போது, அண்ணன் எப்படியாவது மறுபடியும் எம்எல்ஏ ஆகி சட்டப்பேரவை போக வேண்டும் என்கிற கனவில் உள்ளதாக கூறுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் தொகுதியில் சிவக்குமார் வெல்ல அண்ணன் தான் காரணம். இது சிவக்குமாருக்கும் தெரியும். மேலும் பாமகவில் தற்போது வெறும் 5 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். இதனால் பாமக தலைமைக்கு பெரிய அளவில் எவ்வித லாபமும் இல்லை. எனவே இந்த கணக்கை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த அண்ணன், சிவக்குமாரை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளதாவும், அப்படி ராஜினாமா செய்தால் கை நிறைய பணம் அதிமுகவில் பொறுப்பு என்று ஆசை காட்டியுள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால் தைலாபுரத்திற்கு பயந்து கொண்டு இந்த விஷயத்தில் சிவக்குமார் பிடி கொடுக்காமல் இருந்ததாகவும், ஆனால் அண்ணன் தைலாபுரத்திலும் பேசிக் கொள்வதாக கூறியுள்ளதால் தற்போது அண்ணனுக்கு நிழலாக சிவக்குமார் மாறியுள்ளதாக சொல்கிறார்கள்.
இதனிடையே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சிவக்குமாரிடம் சி.வி.சண்முகம் தரப்பு 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசியுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர். 30 கோடி ரூபாய் என்றால் இரண்டு தலைமுறைக்கு செட்டில் ஆகிவிடலாம் என்பதால் சிவக்குமாரும் விரைவில் மயிலம் தொகுதி எம்எல்ஏ பதவியில் இருந்து விலக உள்ளதாகஅரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதில் பாதி உண்மை, பாதி பொய் என்கிறார்கள் சிவி சண்முகத்திற்கு மிக மிக நெருக்கமானவர்கள். அண்ணன் மயிலம் தொகுதி எம்எல்ஏ ஆக கணக்கு போடுவது உண்மை தான், ஆனால் இதற்காக 30 கோடி ரூபாய் பேரம் என்பது எல்லாம் பொய்.
இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சியை வீர்த்த எப்படியும் 20 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே ஒரு எம்எல்ஏ பதவிக்கா அண்ணன் 50 கோடியை செலவு செய்வார் என்று அவர்கள் லாஜிக்குடன் கேட்கிறார்கள். ஆனால் நெருப்பில்லாம் புகையாது என்பதைப் போல் பாமக எம்எல்ஏவிற்கு அதிமுக ஆலோசனை கூட்டத்தில் என்ன வேலை என்றால் சிவி சண்முகத்திற்கு மிக மிக நெருக்கமான கேங் சைலன்ட் ஆகிவிடுகிறது.
Discussion about this post