பாகிஸ்தான் தீவிரவாதத்தின் பக்கம் நிற்பது என்பது நீண்டகாலமாக தொடர்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சிட்டிசன் கூட்டமைப்பு சார்பில் ‘போர்க்களம் முதல் சாதூர்யம் வரை – ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் தேசிய பாதுகாப்பு, தூதரக நடவடிக்கை மற்றும் துணிச்சல் குறித்து முக்கியமான விவாதங்கள் இடம்பெற்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்து, தொடர்ந்து கார்கில் போர், நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு பாகிஸ்தான் தீவிரவாதத்தை தாங்கி அதன் பக்கம் இருப்பது நீண்டகாலமாக தொடர்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்று படைகள் தொழில்நுட்ப சக்திகளை இணைத்து பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதனால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடைப்பெற்றது. இது 15 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமல்லாத ஒன்று என்று ஆளுநர் ரவி சிறப்பித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ராணுவத்துக்கு தேவையான வசதிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை அளித்ததால் தான் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இதன் வெற்றி நம்மை மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் பாராட்டப்படுகிறது. இது 100 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் மனதில் நீண்ட காலம் நினைவில் இருக்கும்.
கருத்தரங்கில் இந்திய விமான படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் எம். மாதேஸ்வரன், புவிசார் அரசியல் நிபுணர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ கர்னல் ஜான் பிரின்ஸ், சென்னை சிட்டிசன் கூட்டமைப்பின் தலைவர் கே.டி.ராகவன் மற்றும் செயலாளர் காயத்திரி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பில் அக்கறையும், ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. மேலும், ராணுவத்துக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து, தீவிரவாதத்தின் எதிரொலிகளை முழுமையாக அடக்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கருத்தரங்கம் உணர்த்தியது.