மேகா வெமுரிக்கு பட்டமளிப்பு விழாவில் தடை
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகமான எம்ஐடியில் கல்வி பயிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி மேகா வெமுரி, காசா பகுதியில் நடைபெறும் போரை எதிர்த்து உரையாற்றியதற்காக, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை செய்யப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு வகுப்புத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெமுரி, மே 29 ஆம் தேதி கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன் எம்ஐடி’ தொடக்க விழாவில் உரையாற்றினார். அவர், பாலஸ்தீன மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், பல்கலைக்கழகம் இஸ்ரேலுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன் காரணமாக, மே 30 ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள எம்ஐடி நிர்வாகம் அவர் மீது தடை விதித்தது. மேலும், விழா நடைபெறும் வரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய கூட அனுமதிக்கவில்லை.
பல்கலைக்கழக செய்தித்துறை இந்த நடவடிக்கையை நியாயமாக்கி, “கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நாங்கள், மேகா நிகழ்வை திட்டமிட்டவர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்” எனக் கூறியுள்ளது.
மேலும், மேகா வெமுரி “இனப்படுகொலைக்கு ஆதரவளிக்கும் மேடையில் நின்று பட்டம் பெற விருப்பமில்லை. ஆனால், உரிய முறைமைகள் பின்பற்றாமல் எனக்குத் தண்டனை வழங்கப்பட்டது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது” எனக் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க – இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) இந்தத் தண்டனையை கண்டித்துள்ளது. “கல்வி சுதந்திரம், உரை சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதைத் தண்டிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு பாலை வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழக இந்து சமய அறநிலையத் துறை 2025–26 ஆண்டிற்கான திட்டமாக, திருக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி காய்ச்சிய பாலை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்கவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றது. அமைச்சர் பி.கே. சேகர்பாபு இதில் கலந்து கொண்டு திட்டத்தைத் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், 10 முக்கிய கோயில்களில் காய்ச்சிய பாலை குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
திட்டத்தின் செயல்பாடு:
- தினசரி பால் விநியோகம்
- 10 கோயில்கள்: திருச்செந்தூர், திருவரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ஆனைமலை, பன்னாரி, திருப்பரங்குன்றம், மருதமலை, பெரியபாளையம்
- திட்ட செலவு: ரூ.50 லட்சம்
குடமுழுக்கு முன்னேற்பாடு
முன்னதாக, திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, இரவு நேர ஆய்வு செய்தது துறை அமைச்சர் தலைமையிலான குழு. விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வரவிருப்பதால், சாலை, குடிநீர், கழிப்பிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படுகின்றன.
முக்கிய புள்ளிகள்:
- ஜூலை 7: குடமுழுக்கு விழா
- 4 முறைகள் முன்னேற்பாட்டு ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளது
- வாகனநிறுத்தும் இடங்கள், பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் நிறைவு செய்யப்படும்
இந்த திட்டங்கள், நல்வாழ்வு மற்றும் பக்தர்களின் நலனுக்காக வகுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.