‘திருவிழா இல்லாத காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை’ – வாகை சந்திரசேகர்

0

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை

திருவிழாக்கள் நடைபெறாத நேரங்களில் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொள்வதைத் தடுக்கும் வகையில், அவர்களுக்கு ஆறு மாதங்கள் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற மண்டல அளவிலான நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நல உதவிகளை வாகை சந்திரசேகர், திருநெல்வேலி ஆட்சியர் ஆர். சுகுமார், எம்எல்ஏ அப்துல்வகாப் மற்றும் மேயர் கோ. ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வாகை சந்திரசேகர், “திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 371 கலைஞர்களுக்கு மொத்தம் ரூ.13.17 லட்சம் மதிப்பிலான நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாடக மற்றும் திரைப்பட கலைஞர்களுக்காகவும் முதல்வர் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கி அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். மேலும், மாவட்ட அளவில் அரசு அதிகாரிகள் நேரடியாக கலைஞர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் அடிப்படையில், அரசு துறைகள் மாவட்ட ரீதியாக கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பு வழங்கி, அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களின் பணியிடங்களை நிரப்பவும் இயல் இசை நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், அரசுத் விழாக்கள் மற்றும் கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நாதஸ்வர கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இசைப் பள்ளிகளில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே பயிற்சியாளர் பதவிக்கான தகுதி இருப்பதைக் குறைக்கும் வகையில் வயது வரம்பைத் திருத்தி அமைக்கவும், அதற்கான பரிந்துரை அரசு முன் வைக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு ஆண்டில் ஆறு மாதங்கள் பணி அமையும். பணி இல்லாத பிற ஆறு மாதங்களில் அவர்களது வாழ்வாதாரத்துக்குத் தேவையான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் நாட்டுப்புற நாடகக் கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சீரமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு மாதத்துக்குள் இத்தளர்வுகளைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here