சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை வசதிக்கான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் அடித்தள வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், தொலைத்தொடர்பு வசதிகள், ஆதார் பதிவு செய்யும் நிரந்தர மையங்கள், மற்றும் பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் போன்ற பல தகவல் தொழில்நுட்ப சேவைகள் தமிழ்நாடு மின்னணு கழகம் (எல்காட்) மூலமாக வழங்கப்பட்டுவருகின்றன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தொலைத்தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு சேவையளிப்பவர்களுக்கு அனுமதிகள் வழங்கும் வகையில் https://row.tn.gov.in என்ற ஒரே சாளர இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் வாயிலாக, கடந்த மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் புதிய தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புகள் அமைக்க 7,772 அனுமதிகள், ஏற்கனவே உள்ள அமைப்புகளை ஒழுங்குப்படுத்த 33,194 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழகம் முழுவதும் ஆதார் தொடர்பான சேவைகளை வழங்க 266 நிரந்தர பதிவு மையங்களை எல்காட் நிறுவியுள்ளதாகவும், அதன் மூலம் 22.09 லட்சம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கும் திட்டம் 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற உமாஜின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்திருந்தார். இந்த திட்டம், தனியார் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன், பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் எல்காட் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்தப் பணியின் கீழ், சென்னையில் 1,869 இடங்களில், மேலும் ஆவடி, தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் 712 இடங்களில் இலவச வைஃபை பயன்பாட்டிற்கான கருவிகள் (ஆக்சஸ் பாயின்ட்) நிறுவப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.