இதனால் அரசியல் களத்தில் அ.ம.மு.க நிலை என்ன என்கிற கேள்வியும் எழுந்தது. மற்றொருபுறம் அ.தி.மு.கவில் உள்ள இரட்டை தலைமைக்குள்ளும் பனிப்போர் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. எதிர்கட்சித் தலைவர் பதவியைக்கூட தனக்கு விட்டுத் தரவில்லை என்கிற வருத்ததில் உள்ள பன்னீர்,எப்போதுவேண்டுமானாலும் பழனிசாமிக்கு எதிராக பொங்குவார் என்கிற நிலையே இப்போதும் இருக்கிறது.அதற்கு துாபம் போடும் வேலையை சசிகலா தரப்பு ஆரம்பித்துள்ளது.
தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க சசிகலா கையில் எடுத்த ஆயுதமே தொண்டர்களுடன் போன் உரையாடல். கடந்த வாரம் முதல் தனது விசுவாசிகளைத் தொடர்புகொள்ளும் சசிகலா “அமைதியாக இருங்கள், அரசியல் களத்திற்குள் நான் வருவது உறுதி” என்று பேசிவருகிறார். அந்த போன் ஆடியோக்கள் சசிகலா தரப்பின் மூலமாக தொடர்ந்து வெளியிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் அ.தி.மு.க முகாமிற்குள் புகைச்சல் வெடிக்கும் என சசிகலா தரப்பு கணக்கு போடுகிறது. மற்றொருபுறம் “சசிகலா பேசும் ஆடியோக்களால் அ.தி.மு.க வில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தி விடமுடியாது. அ.தி.மு.க-என்கிற கட்சிக்குள்ளே சசிகலா இல்லை” என்றெல்லாம் அ.தி.மு.க தலைவர்கள் மறுத்து வருகிறார்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீரின் வாயிலிருந்து இந்த ஆடியோ குறித்தோ, சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரி குறித்தோ எந்த கருத்தும் வரவில்லை. மாறாக “சசிகலாவுடன் இணைந்து செல்வதே கட்சிக்கும் நல்லது, தனக்கும் நல்லது” என பன்னீர் விரும்புகிறார் என்கிற தகவல் மட்டும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இதுகுறித்து பன்னீர் தரப்பிடம் கேட்டால், “பழனிசாமியின் ஒன் மேன் ஷோ ஆட்டத்தை இனியும் பன்னீர் பார்த்துக்கொண்டிருக்க விரும்பவில்லை. தனக்குப் பின்னால் அ.தி.மு.க-விற்குள் வந்த பழனிசாமி தன்னைத் தொடர்ந்து புறக்கணிப்பதைப் பன்னீர் விரும்பவில்லை. இனியும்,பழனிசாமியிடம் பணிந்துபோவதைக்காட்டிலும், சசிகலாவிடம் பணிந்து போவது மேல் என்கிற எண்ணத்திற்குப் பன்னீர் வந்துவிட்டார்.விரைவில் சசிகலாவை அவர் சந்தித்தால்கூட ஆச்சர்யம் இல்லை. அந்த அளவுக்கு எடப்பாடி மீது கடுப்பில் இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குகூட பன்னீரை அழைக்கவில்லை. இதில் கடுப்பான பன்னீர் செல்வம் அன்று இரவே தான் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சசிகலா தரப்பினரை வரவைத்து பேசியிருக்கிறார். அதோடு இந்த சந்திப்பு விஷயத்தை எடப்பாடி தரப்புக்கும் கசியவிட்டுள்ளார். இந்தத் தகவல் எடப்பாடிக்கு சென்றதுமே, பதறிக்கொண்டு சனிக்கிழமை காலை பன்னீர்செல்வத்தை அதே ஹோட்டலில் எடப்பாடி சந்தித்துள்ளார். சசிகலாவை கட்சிக்குள் என்ட்ரியாக்க பன்னீர் நினைக்கிறார். அதை பழனிச்சாமி தடுக்கப்பார்க்கிறார்” என்கிறார்கள்.
மற்றொருபுறம் சசிகலா தரப்பும் அ.தி.மு.கவுக்குள் சத்தமில்லாமல் ஊடுருவும் வேலைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பியான ராமச்சந்திரன் சசிகலாவிற்கான இந்த வேலையைக் கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள். அவர் மூலம் சில மூவ்கள் அ.தி.மு.க-வுக்குள் நடந்துவருகிறது. அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளை ராமச்சந்திரன் சந்தித்து பேசிவருவதாகவும், ஏற்கனவே எடப்பாடி மீது ஏக கடுப்பில் இருக்கும் தென் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் ராமசந்திரனுடன் இணக்கமாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலக்கட்டம் முடிந்த பிறகு பன்னீருடனும் சசிகலா சந்திப்பு நடக்க திட்டமிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு முடிந்தபிறகு அ.தி.மு.க வின் பொதுக்குழு அறிவிப்பை பன்னீரை வைத்து வெளியிட நினைக்கிறது சசிகலா தரப்பு. அந்தப் பொதுக்குழுவில் வைத்து பல பஞ்சாயத்துக்களைக் கிளப்பி, அதன் மூலம் தங்களது இருப்பை அ.தி.மு.க வுக்குள் பதிய வைக்கும் திட்டம் சசிகலா தரப்பிடம் இருக்கிறது. ஆனால், இதற்கு முதலில் பன்னீர் மனது வைக்கவேண்டும். இதைத் தடுக்கவே பழனிசாமி தரப்பு பன்னீரிடம் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார்கள். சசிகலாவோ பன்னீரை வைத்துக்கொண்டே அ.தி.மு.கவுக்குள் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க நினைக்கிறார். அது தனக்கு சாதகமாக வந்தால் அரசியலுக்குள் என்ட்ரி கொடுப்போம், இல்லையென்றால் அமைதியாக ஒதுங்கிவிடலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறாராம்.
Discussion about this post