“வீரியமற்ற கொரோனா வைரஸ் பெரிதாக பாதிக்க வாய்ப்பில்லை” என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025–26 கல்வியாண்டிற்கான புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கல்வி அலுவலர் கலைச்செல்வம், தலைமை ஆசிரியர் பத்மஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும், தமிழக அரசு முதல்வரின் வழிகாட்டுதலின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் முயற்சியாக இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலைப் பெறுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2025–26 கல்வியாண்டில் ரூ.1,141 கோடி மதிப்பிலான கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதில் ரூ.311 கோடிக்கான 4.30 கோடி பாடப்புத்தகங்கள், ரூ.457 கோடிக்கான 1.30 கோடி சீருடைகள், ரூ.162 கோடிக்கான 9.6 கோடி நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ரூ.211 கோடிக்கான பிற கல்வி உபகரணங்கள் அடங்கும்.
கொரோனா வைரஸ் தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆனால் மக்கள் தொடர்ந்து கைகளை சுத்தமாக சோப்பால் கழுவிக் கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். இருமல், தும்மல் வந்தால் கைகளை வைத்து மூடிக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்கள் மற்றும் உடல் நலக் குறைவுடையவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக இவையே வழிகாட்டுதலாக வழங்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை” என அமைச்சர் கூறினார்.