“முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை அதிகாரிகளும் கேட்பதில்லை, மக்களும் கேட்பதில்லை” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
மறைந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்ததாவது, “இஸ்லாமிய சமூகத்திற்காக கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர் காயிதே மில்லத், ஜெயலலிதா தான் காயிதே மில்லத் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார். சரியான திட்டமிடலுடன் தொற்றுப் பரவலை அ.தி.மு.க கட்டுப்படுத்தியது, ஆனால் தி.மு.க தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை வேலைகளை கூட செய்யவில்லை” என குற்றம் சாட்டினார்.
மேலும், “தி.மு.க ஆட்சியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இப்போதுள்ள முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை அதிகாரிகளும் கேட்பதில்லை, மக்களும் கேட்பதில்லை, அதிமுக ஆட்சியில் பிறப்பித்த ஊரடங்கு போல் இல்லை” என தெரிவித்தார்.