திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சி மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு மா. பிரதீப் குமார் தெரிவித்தார். திருச்சியின் மரக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசுசையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு பேசினார்.
அதிக பாதிப்பு இல்லை – முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் தேவை
தற்போதைய கொரோனா பரவல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை என்று தெரிவித்த அவர், “திருச்சி மாவட்டத்தில் தற்போது ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். என்றாலும், தமிழக அரசு பரிந்துரைத்தவாறு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “முன்னெச்சரிக்கையாக தேவையான முன்னிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை குறிப்பிடுகிறேன்” என்றார் மாவட்ட ஆட்சியர்.