12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் (பிளஸ் டூ, பிளஸ் 2 தேர்வுகள்) ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
கொரோனா பாதிப்பு தொடருவதால் நாடு முழுவதும்சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து மாநிலங்களிலும் அடுத்தடுத்து பிளஸ் டூ (12-ம் வகுப்பு) பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் ரத்து தொடர்பாக தமிழக அரசு வல்லுநர்கள் குழு, சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் குழு மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்தார்.
இதனடிப்படையில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். மேலும் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண்களை நிர்ணயிப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.