சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரே நேரத்தில் ஒன்பது மாவட்ட செயலாளர்களை வரவழைத்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ரவுண்ட் கட்டியுள்ளார்.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளை தலா இரண்ட என பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் அதிமுக அறிவித்தது. அதாவது சென்னையில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்தியது அதிமுக. இதற்கு காரணம் சென்னையில் அதிமுக வீக்காக இருக்கிறது என்கிற உளவுத்துறை ரிப்போர்ட் தான். இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமித்தால் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்ட முடியும் என்பதன் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்களை நியமித்தது அதிமுக. அந்த வகையில் சென்னையில் ஜெயலலிதா இருந்த போது செல்வாக்குடன் இருந்த ஆதிராஜாராம் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளர்கள் ஆகினர்.
ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மண்ணை கவ்வியது. குறிப்பாக அமைச்சர்களான ஜெயக்குமார், பெஞ்சமினும் தோல்வியை தழுவினர். இதற்கு முன்பு சென்னையில் இத்தனை தொகுதிகளை சமீப காலங்களில் அதிமுக தோற்றது இல்லை. கடந்த முறை சென்னையில் திமுக பெருவாரியான தொகுதிகளை வென்ற போதிலும் கூட ராயபுரம், மதுரவாயல், தியாகராயநகர் போன்ற தொகுதிகளை அதிமுக வென்று இருந்தது. ஆனால் இந்த முறை இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 18 தொகுதிகளில் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது.
இது குறித்து ஆலோசனை நடத்த ஒன்பது மாவட்டச் செயலாளர்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு வருமாறு ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் சேலத்தில் இருந்து சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, கட்சி அலுவலகத்தில் ஒன்பது பேரையும் ஒரே நேரத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, ஜெயக்குமார், சத்யா, அசோக், விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன், பெஞ்சமின் என அனைவரும் ஆஜராகினர். தேர்தல் தோல்விக்கு பிறகு எதிர்கட்சி தலைவர் தேர்வுக்கு பிறகு தற்போது தான் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகம் வந்திருந்தார்.
சென்னையில் தேர்தல் பணிகளை திமுகவை விட அதிமுகவினர் சிறப்பாகவே செய்திருந்தனர் என்று தான் பேச்சை ஆரம்பித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தோற்றதற்கு மிக முக்கிய காரணம் வாக்காளர்கள் மனநிலையை சரியாக உணராதது தான் என்று கூறியுள்ளார். அத்தோடு மாவட்டச் செயலாளர்கள் வேட்பாளர்களை கண்டுகொள்ளவில்லை என்கிற புகாரை பற்றியும் எடப்பாடி பழனிசாமி விரிவாக பேசியுள்ளார். ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்றால் மாவட்டச் செயலாளர்கள் பதவி எதற்கு என்றும் ஒரு கட்டத்தில் எடப்பாடி கடுமை காட்டியதாக கூறுகிறார்கள்.
எடப்பாடி பேசிக் கொண்டிருந்த போது குறுக்கே அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாகவும் அப்போது சென்னையை பொறுத்தவரை திமுக ஆதரவு அலை இருந்ததாகவும் இதனால் தான் அதிமுகவின் கோட்டையான ராயபுரம், தியாகராயநகர், ஆர்.கே.நகரில் கூட அதிமுக தோற்க நேரிட்டதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்க எடப்பாடியார் மறுத்துவிட்டதாக சொல்கிறார்கள். எந்த அலையாக இருந்தாலும் தேர்தல் பணிகள் மூலம் மாற்றியிருக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆணித்தனமாக கூறியுள்ளார். மேலும் மாவட்டச் செயலாளர்களிடம் தான் மேலும் தங்களிடம் எதிர்பார்ப்பதாகவும் கொரோனா சமயத்தில் வீட்டிற்குள் இருப்பதை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்ததாக சொல்கிறார்கள்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் என அதிமுக படு தோல்வி அடைந்த மாவட்டச் செயலாளர்களை சந்தித்து ரவுண்டு கட்டவும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்திருக்கிறாராம். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
Discussion about this post