மெட்ராஸ் மாகாணத்தை பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கூறியதிலிருந்தே, தமிழ்நாடு என்ற பெயரே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத்திற்காகப் போராடியவர்கள் யாரும் தமிழகம் என்ற பெயரை முன்வைத்திருக்கிறார்களா?
தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை “தமிழகம்” எனக் கூற வேண்டுமென மூத்த பத்திரிகையாளர் மாலன் கூறியதையடுத்து, இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் தீவிரமாக பதிவுசெய்யப்பட்டன.
மெட்ராஸ் மாகாணத்திலிருந்து மொழிவாரி அடிப்படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்றுவிட்டதிலிருந்தே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமாக இருந்து வந்தது.
பெரியார், சங்கரலிங்கனார், ம.பொ.சிவஞானம், சி.என். அண்ணாதுரை ஆகியோர் தொடர்ந்து இது குறித்துப் பேசிவந்தனர்.
நாடாளுமன்றத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பூபேஷ் குப்தா இது தொடர்பாக மசோதா ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்.
அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1961 என்ற பெயரில் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் மாநிலங்கள் என்ற தலைப்பின் கீழ் மாநிலங்களின் பெயர்களைக் கொண்டிருக்கிற பகுதியில் பதிவு 7ல் மெட்ராஸ் என்ற சொல்லுக்குப் பதிலாக தமிழ்நாடு என்ற சொல்லைப் பதிவுசெய்வதை அந்த மசோதா வலியுறுத்தியது.
அந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய பூபேஷ் குப்தா, “வரலாறு, மொழி, கலாசார அடிப்படைகளுக்கு இசைவாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து மெட்ராஸ் மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களிடம் மிக ஆழமாக உள்ளது” என்று கூறினார்.
சி.என். அண்ணாதுரை உள்பட பல உறுப்பினர்களும் பங்குபெற்ற அந்த நீண்ட விவாதத்தின்போது ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டினார் பூபேஷ் குப்தா. அதாவது, 1920ல் காங்கிரஸ் சீரமைக்கப்பட்டபோது, மெட்ராஸ் காங்கிரஸ் கமிட்டி என்று அழைக்கப்படாமல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என அழைக்கப்பட்டது ஏன் என்று கேட்டார் அவர்.
பூபேஷ் குப்தா கொண்டுவந்த மசோதா தோல்வியடைந்தாலும் கூட, அந்த விவாதம் நெடுக யாருமே, மெட்ராஸ் மாகாணத்தின் பெயரை தமிழகம் என்று குறிப்பிடவில்லை. தமிழ்நாடு என்று மாற்றுவது குறித்தே வாதப் பிரதிவாதங்கள் நடந்தன.
மொழிவாரி மாநிலங்கள் குறித்த விவாதங்கள் எழுந்ததிலிருந்தே, மெட்ராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்துவந்தன. விடுதலை இதழில் அக்டோபர் 11ஆம் தேதி எழுதிய பெரியார், “தமிழ், தமிழ்நாடு” என்கின்ற பெயர்கூட இந்த நாட்டுக்கு, சமுதாயத்துக்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றிபெற்றுவிட்டார்கள் என்ற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ என்னுடைய கழகத்தினுடையவோ என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டுமெனக் கேள்வி எழுப்பினார்.
“தமிழர்கள் இனி பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்றே வழங்கிவர வேண்டும்” என்றும் குறிப்பிட்டார் பெரியார்.
1950களின் மத்தியில் சங்கரலிங்கனார் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தில் இறங்கியபோது, அதில் ஒரு கோரிக்கையாக மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமென்று இருந்தது.
தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக முன்வைத்தே 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து அவர், தனது உயிரைத் துறந்தார்.
இந்தப் பெயர் மாற்றப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஒரு அமைப்பு, ம.பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம். 1961ல் மிகத் தீவிரமாக இதற்கான போராட்டங்களை நடத்த ஆரம்பித்தார் ம.பொ. சிவஞானம்.
ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மட்டும் தமிழ்நாடு என்று அழைக்கவும் மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டது.
ஆனால், ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டுமென்பதற்கான போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சி.என். அண்ணாதுரை, “பரிபாடல் என்ற நூலில் தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெல்லாம் என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்குப் பொருள், மூன்று பக்கங்களும் கடல் சூழ்ந்த இனிய தமிழ்நாடு!” என்று குறிப்பிட்டார்.
மேலும் எம்.என். லிங்கம் என்ற உறுப்பினர், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தின் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன என்று கேள்வியெழுப்பியபோது, “பார்லிமென்ட் என்பதை லோக் சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியபோது நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரெசிடென்ட் என்பதை ராஷ்ட்ரபதி என்று மாற்றியபோது நீங்கள் எதை அடைந்தீர்கள்? நான் உங்களைத் திருப்பிக் கேட்கிறேன். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்?” என்று பதில் கேள்வி எழுப்பினார் சி.என். அண்ணாதுரை.
இதன் உச்சகட்டமாக 1967ல் சி.என். அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ஆங்கிலத்திலும் பயன்படுத்துவதை நிறுத்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தமிழ்நாடு என்றே மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடுவதற்கான தீர்மானம் 1967 ஜூலை 18ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்டது.
தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறிய பிறகு, முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, தமிழ்நாடு என மூன்று முறை சொன்னதும், உறுப்பினர்கள் வாழ்க என முழக்கமிட்டனர்.
அதற்கு சற்று முன்பாகவே, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம் என நியான் விளக்கில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு 1969 ஜனவரி 14ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் அதிகாரபூர்வமாக தமிழ்நாடு என ஆயிற்று.
இந்தப் பெயர் மாற்றத்திற்கான விவாதங்கள், போராட்டக் குரல்கள் எல்லாமே, “மெட்ராஸ்” என்ற பெயருக்குப் பதிலாக “தமிழ்நாடு” என்ற பெயரைச் சூட்ட வேண்டுமா, கூடாதா என்பது குறித்துத்தான் நடந்ததே தவிர, தமிழகம் என்ற பெயர் ஆலோசிக்கப்படவில்லை.
Discussion about this post