ஒட்டகம் மேய்க்க வைத்து துன்புறுத்தல்: சவுதியில் இருந்து நாகை தொழிலாளியை மீட்டு நாதக உதவி

0

சவுதி அரேபியாவில் தோட்ட வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு, ஒட்டகங்கள் மேய்க்கும் வேலைக்குத் தள்ளப்பட்ட நாகை மாவட்ட தொழிலாளரை ‘நாம் தமிழர்’ கட்சியினர் ரூ.1.5 லட்சம் செலுத்தி மீட்டனர்.

நாகை மாவட்டம் பெரிய தும்பூரைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 45), வேலையில்லா விவசாயத் தொழிலாளி. அவரது மனைவி உதயஜோதி, இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப நெருக்கடியால் வெளிநாட்டு வேலைக்கு செல்லத் தீர்மானித்த கவாஸ்கர், ஐந்து மாதங்களுக்கு முன்னர் தோட்ட பணிக்கென ஒரு பயண நிறுவனம் மூலம் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால், எதிர்பார்த்த வேலையின் பதிலாக, அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகங்களை மேய்க்கும் பணி அளிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த அவர், அங்குள்ள நபர்களால் அடித்து, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவரத்தை அறிந்த அவரது மனைவி உதயஜோதி, நாகை மாவட்ட ‘நாம் தமிழர்’ கட்சி நிர்வாகிகளை அணுகினார். அவர்கள், கட்சியின் வெளிநாட்டு பிரிவான ‘செந்தமிழர் பாசறை’ செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு, கவாஸ்கரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

வேலை வழங்கியவரிடம் பேசிய நிர்வாகிகள், ரூ.1.5 லட்சம் செலுத்தினால் மட்டுமே விடுவிப்பேன் என்ற பதிலுக்கு, அந்த தொகையை கட்டி கவாஸ்கரின் விடுவிப்பை உறுதி செய்தனர்.

திருச்சி விமான நிலையம் வழியாக நாடு திரும்பிய கவாஸ்கரை, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு தனபால், சோழசூரன், ரஞ்சித், நாகை அப்பு உள்ளிட்டோர் வரவேற்றனர். கணவரின் மீட்பால் உருகிய உதயஜோதி மற்றும் அவரது பிள்ளைகள், கட்சி நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றியையும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here