சேலம் அருகே, கொரோனா ஊரடங்கால் பெற்றோருக்கு வேலை இல்லாததால் வருமானத்திற்காக வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி ஒரு லிட்டர் 1,500 ரூபாய் வீதம் விற்றுவந்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த இரும்பாலை அருகே உள்ள பெருமாகவுண்டன்பட்டி கிள்ளான் வட்டம் பகுதியில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல்துறை ஆய்வாளர் சந்திரகலாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் தலைமையில் காவல்துறையினர் கிள்ளன் வட்டம் பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகன் பூபதி (20) என்பவர், தன் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்தனர். பூபதியின் வீட்டிலிருந்து விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 5 லிட்டர் சாராயம், 15 லிட்டர் ஊறல் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சேலம் அரசு கலைக்கல்லூரியில் பூபதி பட்டப்படிப்பு படித்துவருவது தெரியவந்தது. கரோனா ஊரடங்கால் பெற்றோருக்கு வேலை இல்லை என்றும், அதனால் வருமானத்திற்காக வீட்டிலேயே சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிவந்ததாகவும், ஒரு லிட்டர் சாராயத்தை 1,500 ரூபாய்க்கு விற்றுவந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சாராயத்தைக் காய்ச்சி, நண்பர்கள் வட்டாரத்தில் விற்றுவந்துள்ளார். வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் வீடு தேடிச்சென்று பாக்கெட்டிலும், பாட்டிலிலும் அடைத்து சாராயத்தை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் பூபதியை, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Discussion about this post