பொன்முடிக்கு எதிரான செம்மண் கொள்ளை வழக்கில் கூடுதலாக 20 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

0

செம்மண் கொள்ளை வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக மேலும் 20 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் – விசாரணை ஜூன் 18-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் இயங்கிய செம்மண் குவாரியில், 2006-11-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் விதிமீறலாக 2,64,644 லோடுகள் செம்மண் அகழப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசு தொகைக்கு ரூ.28.36 கோடி இழப்பாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் முன்னாள் எம்.பி. கவுதமசிகாமணி, மற்றும் ஆதரவாளர்கள் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகியோருக்கு எதிராக 2012-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்ட லோகநாதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். வழக்கில் அரசு தரப்பில் 67 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 51 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் 30 பேர் தங்களது முந்தைய வாக்குமூலங்களை மாற்றியுள்ளனர்.

இந்நிலையில், ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற அமர்வில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம் ஆகியோர் ஆஜராகினர். ஆனால், பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. இவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதே நேரத்தில், அரசு தரப்பில் 20 பக்கங்களைக் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்பே உள்ள 67 சாட்சிகளுடன் கூடுதலாக 4 பேரை சாட்சிகளாக சேர்க்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்ட நீதிபதி மணிமொழி, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here