சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது முதலே சசிகலா குறித்த எதிர்பார்ப்பு தொடருகிறது.
சசிகலா- அதிமுக
அதிமுகவில் சசிகலா அண்ட் கோவை சேர்க்கவே கூடாது என்பதில் ஈபிஎஸ் தரப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ, சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்தாக வேண்டும்; அப்போதுதான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிறது.
சசிகலா ஆடியோ
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சசிகலா பேசும் ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. சசிகலா வீட்டில் இருந்தே கட்சியின் நம்பிக்கையான, விசுவாசமான தொண்டர்கள் சிலர் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு போனடிக்கப்படுகிறது. சின்னம்மா வீட்டில் இருந்து பேசுகிறோம்.. அம்மா பேசனும் என்கிறார்கள் என்ற குரலுடன் இந்த ஆடியோக்கள் வலம் வருகின்றன.
அரசியல் ரீ என்ட்ரி
சசிகலா என்ன பேசுகிறார்.. என்ன சொல்ல வருகிறார் என்பதை விட தம்மிடம் பேசி கொண்டிருக்கிறாரே என்கிற பெருமிதத்தில் தொண்டர்கள் கண்ணீர் விடுவதும் கதறி அழுவதுமான குரல்களும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ஒவ்வொரு ஆடியோவிலும் சசிகலா, தாம் மீண்டும் அரசியலுக்கு வரப் போகிறேன் என்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
மீண்டும் ஆடியோ
தற்போது தொண்டர்களிடம் சசிகலா பேசும் 5-வது ஆடியோ வெளியாகி உள்ளது. அரக்கோணம் செம்பேடு கிராமத்தின் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசுவதாக இந்த 5வது ஆடியோ உள்ளது. அதில், தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறாங்க.. புரியுது.. இந்த கொரோனா தாக்கம் முடிந்த உடன் தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்.. எதுக்கும் பயப்படாதீங்க.. என்று ஆறுதல் சொல்கிறார் சசிகலா.
அதிமுகவில் எதிர்ப்பு
அதேநேரத்தில் சசிகலா பேசுவது அதிமுக தொண்டர்களிடமே இல்லை; அமமுகவினரிடம்தான் என்று ஏற்கனவே பதில் கொடுத்திருந்தார் அதிமுக எம்.எல்.ஏ. கேபி முனுசாமி. மேலும் சசிகலாவின் பேச்சை எந்த ஒரு அதிமுக தொண்டனும் காதுகொடுத்து கேட்கவும் மாட்டான் என்றும் முனுசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 5-வது ஆடியோ சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
Discussion about this post