பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு வாய்ப்பு உள்ளது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இது தொடர்பாக பேச்சு நடத்த, பா.ஜ.க., மேலிட பிரமுகர் ஒருவர், விரைவில் சென்னைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி பா.ஜ.க இணைந்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்தது. தமிழகத்திலிருந்து அ.தி.மு.கவைச் சேர்ந்த ரவீந்திரநாத் மட்டும் அக்கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தார்.
எனவே, அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அப்போதே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த யாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிகிறது.
அப்போது, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதில், காங்கிரஸிலிருந்து பா.ஜ.கவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் மாநில முன்னாள் முதல்வர் சர்வானந்த் சோனாவால், பீகார் மாநில பா.ஜ.க மூத்த தலைவர் சுஷில் மோடி, ஜெய்பாண்டா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.கவுடன் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்தித்த சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகிவிட்டன. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் கட்சியையும் அமைச்சரவையில் இணைத்து கொள்ளவும் ஆசைப்படுகிறாராம் பிரதமர்.
மத்திய அமைச்சரவையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியையும் சேர்த்துக் கொள்ள பிரதமர் விரும்புகிறார். எனவே, இருக்கும் கூட்டணியை தக்கவைக்கும் பொருட்டு தமிழகச் சேர்ந்த அ.தி.மு.க எம்.பிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றன. அதன்படி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post