தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது . இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மே 30 வரை தளர்வில்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மேலும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
பாதிப்புக்கள் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது காலை 7 முதல் மாலை 6 மணி வரை காய்கறிகள், மளிகைக் கடை வாகனங்கள், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஜூன் 7ம் தேதி வரையில், மாலை 6 மணி வரையில் காய்கறிகள், பழங்கள் போன்றவை உங்கள் வீட்டுப் பகுதிகளிலேயே தள்ளு வண்டிகளில் விற்பனை செய்யப்படும். உங்கள் பகுதியில் உள்ள மளிகை கடைகள், கை வண்டிகளிலோ, அல்லது தள்ளு வண்டியிலோ மளிகைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யலாம். போன் மூலமாக ஆர்டர் எடுத்து, வீட்டிற்கே வந்தும் டெலிவரி செய்யலாம். மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள 50 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
Discussion about this post