முதல்வன் திட்டத்தையும் பட்டியலின மக்களையும் குறித்து அவமரியாதையாக பேசியதால், நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள நிம்மியம்பட்டு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அமுதா. சமீபத்தில், அவரும் அதே பள்ளியில் பணியாற்றும் இன்னொரு ஆசிரியருக்கிடையே நடந்த உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில், “கல்லூரி கனவு திட்டம் உள்ளிட்ட பல அரசு திட்டங்களை மேற்கொண்டு கோடை விடுமுறையிலும் ஆசிரியர்களை கல்வித் துறை நிர்வாகிகள் ஒய்வு இல்லாமல் வேலை பார்க்க வைக்கின்றனர். மேலும், அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுவின் பெயரில் பட்டியலின மக்கள் கேள்விகள் எழுப்புவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என அவர் கூறியதாக பதிவானது.
மேலும், “அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு அவசியமா?” என்ற கேள்வியையும் எழுப்பிய நிலையில், அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளதற்காக, அந்த ஆடியோ பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதனையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் தலைமையாசிரியர் அமுதாவை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அரசு பள்ளிக்கு மாற்றும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.