‘ கட்சியை சரிசெய்துவிடலாம், சீக்கிரம் வந்துவிடுவேன்’ என்று தனது ஆதரவாளரிடம் சசிகலா பேசிய ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா முதலமைச்சராக பதவியேற்கவிருந்த சூழலில், ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் செய்தார், அதன்பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. சசிகலா சிறைக்கு சென்ற சூழலில், அவரின் வழிகாட்டுதலுடன் முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து சசிகலாவையே கட்சியை விட்டு ஓரங்கட்டினர். இந்த சூழலில்தான் நான்கு ஆண்டு சிறைதண்டனை முடிந்து பிப்ரவரியில் விடுதலையானார் சசிகலா, விடுதலைக்கு பின்னர் பரபரப்பு காட்டிய அவர், தேர்தல் அறிவிப்பு வெளிவரவிருந்த சூழலில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கடந்த மார்ச் 3 ஆம் தேதி அறிவித்தார், அதிலிருந்து மௌனம் காத்து வந்த சசிகலா தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதிலுமுள்ள கோவில்களுக்கு ஆன்மீக விசிட் அடித்தார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சமீபகாலமாக மூத்த பத்திரிக்கையாளர்களையும், முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகின. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை மிக உன்னிப்பாக கவனித்து வரும் சசிகலா அதிமுகவில் நடந்துவரும் சலசலப்புகளையும் கவனித்து வருகிறார். அத்துடன் அதிமுகவின் தோல்வியையும், அமமுகவின் படுதோல்வியையும் ஆராய்ந்தும் வருகிறார்.
இந்த சூழ்நிலையில்தான் தொண்டர் ஒருவருக்கு தொலைபேசி வாயிலாக சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது, அதில் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் நான் நிச்சயம் வருவேன் கட்சியை சரிசெய்துவிடலாம் என்று பேசும் சசிகலா, கொரோனா மிக மோசமாக இருக்கக்கூடிய காரணத்தால் குடும்பத்தாரை மிக கவனமுடன் இருக்குமாறு அவரது ஆதரவாளருக்கு அறிவுரை சொல்லுகிறார். சுமார் 1 நிமிடம் ஓடும் இந்த ஆடியோ மூலம், சசிகலா மீண்டும் தமிழக அரசியலில் வலம் வருவார் என்பதை காட்டுவது போல உள்ளது.
அதிமுகவில் தனித்தனி அறிக்கைகள், தனித்தனி ஆவர்த்தனங்கள் என பவர் ரேஸில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவுக்கு மாற்று என அமமுகவை தொடங்கிய தினகரனை சட்டமன்ற தேர்தல் படுதோல்வி ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இந்த சூழலில்தான் சசிகலாவின் இந்த ஆடியோ அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்காமல், ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தபோதே அவரின் ரீ-என்ட்ரி நிச்சயம் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். அரசியலில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கவிருக்கிறாரா சசிகலா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Discussion about this post