கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என இரண்டிலும் வைரஸ் பரவல் சென்னையில்தான் அதிகம் இருந்தது. தற்போது சென்னையை கோவை ஓவர்டேக் செய்துவிட்டது. சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக தொற்று குறைந்துகொண்டே வந்த நிலையில், கோவையில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. சென்னையில் நேற்று 3,561 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில், கோவையில் 4,268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
கொரோனா தொற்றிலிருந்து கோவையை மீட்பதற்காக தமிழக அரசு போர்க்கால அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமைச்சர்கள் குழு, அதிகாரிகள் குழு என அமைக்கப்பட்டு தீவிரமாகக் கோவை கண்காணிப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கோவையில் கடந்த 10 நாட்களாக நோய்த் தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை. நோய் தொற்று விகிதம், தடுப்பூசி விகிதம் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
மக்களுக்குத் தேவையான தடுப்பூசி போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். கோவையில் 70 சதவீதம் பேர் தொழில்துறையை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. கோவை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று உயர்ந்துவருகிறது. தமிழக அரசுக்கு உதவவும் நெருக்கடியை திறமையாக கையாளவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர் மட்ட குழுவை அமைத்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post