கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை காற்றின் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மே 27-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று அதிகாலையில் குமரி மாவட்டம் முழுவதும் திடீரென பலத்த மழை பெய்தது,
கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி , மார்த்தாண்டம் மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. இதுபோல நாகர்கோவில் நகர் முழுவதும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்பு அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல மேற்கு மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியது. திடீர் மழை காரணமாக பொது மக்கள் பலர் அவதிக்கு ஆளானார்கள்.
குமரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து சற்று உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 256 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் தற்போது 37.70 கன அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து 123 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 522.31 அடியாக உள்ளது. சிற்றார் 1 அணையில் 5.61 அடியும், சிற்றார் 2 அணையில் 5.70 அடி தண்ணீரும் உள்ளது.
மாம்பழத்துறையாறு அணையில் 14.76 அடி தண்ணீர் உள்ளது. பொய்கை அணையில் 19 அடி தண்ணீர் உள்ளது. நாகர்கோவில் பகுதியில் 7.8 மி.மீ. மழை பெய்துள்ளது. பூதப்பாண்டியில் 1.2 மி.மீட்டரும், ஆரல்வாய்மொழியில் 2, கொட்டாரத்தில் 2.6, மாம்பழத்துறையாறில் 2.6 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்த திடீர் மழை காரணமாக வெப்பம் சற்று குறைந்தது. பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல வீடுகள் இடிந்து விழுந்தது. தாழ்வான பகுதியில் நீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பல பகுதிகளில் சூழ்ந்த மழை நீரால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். துண்டிக்கப்பட்ட மின்சாரம் வினியோகத்தை வழங்க நடவடிக்கை இல்லை, வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்க இல்லை, நீரில் மூழ்கிய வாகனங்களை மீட்பதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். சரியான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளாததம் இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
Discussion about this post