புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் மே 26ம் தேதி தற்காலிக சட்டசபை தலைவர் முன்பு பதவி பிரமாணம் செய்ய உள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக போகும் நிலையில் இன்னும் அங்கு எம்எல்ஏக்கள் பதவி ஏற்கவில்லை. அங்கு முதல்வராக என். ரங்கசாமி மட்டுமே பதவி ஏற்றுள்ளார். புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதை தவிர எம்எல்ஏக்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது. இது போக அங்கு பாஜகவிற்கு 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அதேபோல் அங்கு பாஜக உறுப்பினர்கள் 3 பேர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாஜகவிற்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அங்கு இதனால் பாஜக துணை முதல்வர் பதவி, அல்லது அதிக அமைச்சர் பொறுப்புகளை கேட்குமோ என்று குழப்பம் நிலவி வந்தது. அதேபோல் ரங்கசாமியும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு தள்ளிப்போய்கொண்டே இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர். அங்கு புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் மே 26 ம் தேதி காலை 9 மணிக்கு துணை நிலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்று கொள்கிறார்.
தொடர்ந்து அதே நாள் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகின்றது. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சட்டப்பேரவை தலைவர் முன்பு பதவி பிரமாணம் செய்து கொள்கின்றனர்.
Discussion about this post