கொரோனா பிரச்சனைகள் ஒருபக்கம் நெருக்கித்தள்ள, 3 கட்சிகளுக்குள் நிலவும் சிக்கலை எப்படி சமாளிப்பது என்ற அடுத்த குழப்பத்திற்கு ஆளாகி உள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்..!
இந்த முறை திமுக கூட்டணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை..
பலகட்ட பேச்சுவார்த்தைகள், கோரிக்கைகள், சமாதான நடவடிக்கைகள், என அனைத்து அரசியல் சம்பிரதாயங்கள் முடிந்த பின்னரே, கூட்டணி உறுதியானது..
ஒவ்வொரு கட்சியையும், அதன் பின்னணி, தொகுதியில் பலம் போன்றவற்றை பார்த்து பார்த்து ஆராய்ந்த பிறகே தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த வகையில், முஸ்லீம் லீக் கட்சிக்கு, கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 2 தொகுதிகள் மட்டும் கொடுப்பதாக திமுக சொன்னது.. ஆனால் தங்களுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்றும், அந்த 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்திலேயே போட்டியிட்டு கொள்கிறோம் என்றும் முஸ்லீம் லீக் பிடிவாதம் பிடித்தது. இதையடுத்து முஸ்லீம் லீக் கேட்டபடியே, 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியது…
கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் என 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.. இந்த 3 தொகுதிகளில் 2 தொகுதிகளிலாவது முஸ்லீம் லீக் வெற்றிபெறும் என்றும் கருத்து கணிப்புகளும் சொல்லின.. பிரச்சாரங்களும் படுதீவிரமாக நடந்தன.. ஆனால், 3 இடங்களிலும் அக்கட்சி மண்ணை கவ்வியது. இதனால், முஸ்லீம் கட்சி கவலையிலும் வருத்தத்திலும் உள்ளது.. இது அவர்களுக்கு அதிர்ச்சி தோல்விதான்.. அந்த அளவுக்கு 3 தொகுதிகளையும் மலைபோல நம்பி இருந்தனர்.
இப்போது விஷயம் என்னவென்றல், இவர்களை ஆறுதல்படுத்தும் விதமாக முக்கிய பதவி ஒன்றை வழங்க, முக ஸ்டாலின் யோசித்து வருகிறாராம்.. அதாவது, கடந்த மார்ச் மாதம் எம்பி முகமது ஜான் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.. இவர் வக்ஃபு வாரிய தலைவராவும் செயல்பட்டு வந்தவர்.. அதனால், காலியாக உள்ள அந்த தலைவர் பதவியை கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு அளித்து அவர்களை ஆறுதல் படுத்த திமுக தலைமை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இல்லாவிட்டால், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் நியமன பதவி அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த விஷயம் மனிதநேய ஜனநாயக கட்சி வரை கசிந்துள்ளது.. நாங்கள் 2019 எம்பி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுக்கு ஆதரவு தந்தோம்.. இந்த முறை தேர்தலிலும், வெளியில் இருந்து ஆதரவு தந்திருந்தோம்.. அப்படி இருக்கும்போது, வக்ஃபு வாரிய தலைவர் பதவி அல்லது தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பதவி என இரண்டில் ஒன்றை தங்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று தமீமுன் அன்சாரி வலியுறுத்தியதாக தெரிகிறது.
தமீமுன் அன்சாரியே பதவி கேட்கிறார் என்றால் ஜவாஹிருல்லா சும்மா இருப்பாரா என்ன? மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தங்களுக்குதான் அந்த இரண்டு பதவிகளில் ஒன்று தரப்பட வேண்டும் என்று திமுக தலைமையிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்..
இதனால், ஒரு பதவிக்கு 3 கட்சிகள் மல்லுக்கட்டி வருகின்றன.. இது ஸ்டாலினுக்குதான் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.. 2 பதவிகள் என்றாலும் 2 கட்சிகளுக்கு தந்துவிடலாம்.. அப்படி பார்த்தாலும் மிச்சம் ஒரு கட்சி எஞ்சியுள்ளது.. அந்த கட்சியை சமாதானப்படுத்த வேண்டிய நிலைமை திமுகவுக்கு ஏற்படும்.. அதனால், எதிர்கால அரசியல் தேவையை கருத்தில் கொண்டு, யாருக்கு இந்த பதவி சென்றடையும் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது… பார்ப்போம்..!
Discussion about this post