உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடுகளுக்கு வேண்டுமானால் தேசிய அளவிலான நீட் தேர்வை நடத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தோம். மாநில ஒதுக்கீட்டில் வரும் கல்லூரிகளுக்கு முன்பு நடத்தியது போல, மாநில அளவிலேயே தேர்வை நடத்திக் கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கமாட்டோம் எனவும் ஏற்கனவே சொல்லிவிட்டோம்” என்று பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொன்முடியின் இந்தக் கருத்துக்கு பாமக இளைஞரணி தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது என்ன இரண்டும் கெட்டான் நிலைப்பாடு? எந்தப் படிப்புக்கும், எந்த வடிவிலும் நுழைவுத்தேர்வு கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு கூடாது. நீட் தேர்விலிருந்து ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையே கல்வி அமைச்சர்கள் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும், அதற்குப் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவிவரும் இக்காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் முறைகள் குறித்து தமிழக அரசின் கருத்துகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.
மேலும் தமிழக அரசின் இறுதி நிலைப்பாட்டை முதல்வருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்திற்கு நீட் (NEET ) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். உயர்கல்வித் துறை அமைச்சரின் இக்கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post