370 மதராஸ் முகாம் தமிழ் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது
டெல்லியில் தங்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 370 தமிழ் குடும்பங்களுக்கான வாழ்வாதார நிவாரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த ரொக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் எஸ்.எம். நாசர் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதுதில்லி ஜங்புரா பகுதியில் உள்ள மதராஸ் கேம்ப் குடிசைப் பகுதியில் வசித்து வந்த 370 தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12,000 மதிப்பிலான ரொக்கமும் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பும் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று டெல்லியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. பயனாளிகள் விவரங்களைச் சரிபார்த்து ஆவணங்களைப் பெறும் வகையில் ஏழு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. பயனாளிகள் தங்கியிருந்த இடங்களில் இருந்து சிறப்பு வாகனங்களில் அழைத்து வரப்பட்டு, உதவிகளை பெற்ற பிறகு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இடைவேளையில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
வங்கிக்கணக்கில்லாத பயனாளிகளுக்காக தமிழ்நாடு இல்லத்தில் வங்கி முகவர்கள் வரவழைக்கப்பட்டு, புதிய ஜன்தன் சேமிப்பு கணக்குகள் திறக்கப்பட்டு, ரூ.8,000 ரொக்கம் நேரடியாக அவர்களின் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டது. வீட்டிலிருந்து வெளிவர இயலாதவர்களுக்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கான உதவிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.எம்.நாசர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் மா.வள்ளலார், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் அஷிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.